திருநெல்வேலி மாவட்டம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(சக்சஸ் சுந்தர்). இவர் யூடியூபில் ஹிந்தி கிளாஸ் எடுத்து வந்துள்ளார். மேலும் அவர் திருநெல்வேலியில் சேரன்மாதேவி தாலுகாவில் நெக்ஸ்ட் ஜெட் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் அந்த நிறுவனத்தில் கொரோனா கோல்ட் பிஸ்னஸ் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி அதில் 10 கிராம் தங்கம் வாங்கினால் 24 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என அவரது யூடியூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் 10 கிராம் தங்கம் வாங்க முடியாதவர்கள் 8000 மட்டும் கட்டி இந்த திட்டத்தில் சேரலாம் எனவும் இது ஏழை மக்களுக்கான கொரோனாவால் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு என தெரிவித்துள்ளார். அந்த பிசினஸ் பிடிக்கவில்லை என்றால் மூன்று மாதத்திற்கு பிறகு 24 மணி நேரத்தில் கட்டிய தொகை திருப்பி வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
மேலும் முதலில் சேரும் நபருக்கு முன்னுரிமை எனவும் தெரிவித்துள்ளார்.இதனைப் பார்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணைந்ததாக தெரிகிறது. அதனை அடுத்து இந்த பிசினஸை சுந்தரின் மனைவி ஜெபகனி மற்றும் அவரது மகன் விஜய் என மூவரும் இணைந்து நடத்தி வந்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியது போல முதலில் சேர்ந்த நபருக்கு 24 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி தரப்பட்டுள்ளது. பின்னர் அத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த பிசினஸ் முடங்கியுள்ளது.
இதனையடுத்து சிலர் ஆரம்பத்தில் கட்டிய பணத்தை திருப்பி வாங்கி கொண்டு பிசினஸில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது அதிலிருந்து சிலரும் வெளியேற கேட்டபோது முன்னர் கூறியது போல முழுத்தொகையும் கிடைக்காது சுந்தர் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி முதலீடு செய்தவர்கள் பலமுறை செல்போன் மூலமாகவும் நேரடியாகவும் சென்று அணுகிய போது சரியான விளக்கம் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததாகவும் எனவே சுந்தர் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை உரிய முறையில் விசாரித்து தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தரும்படி கோவையை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.