Skip to content

கும்பகோணத்தில் பல்வேறு இடத்தில் வழிப்பறி…. 2 பேருக்கு 9 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி சாத்தார தெருவைசேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 75). இவர் கடந்த 2022-ம் ஆண்டு சாந்தார தெருவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்லம்மாள் கழுத்தில் கிடந்த கவரிங் சங்கிலியை பறித்து சென்றனர்.

இதே போல் கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூர் பகுதியை சேர்ந்த திராவிட செல்வம்(61) என்பவர் தனது மனைவியுடன் கும்பகோணத்திற்கு வந்தார். அப்போது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது மனைவியின் கையில் இருந்த பணப்பையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கும்பகோணம் மூர்த்தி சாலை யோகம் நகரை சேர்ந்தவர் நடராஜன்(63). இவர் வருவாய் துறையில் துணை ஆட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் இவரது உறவினரும் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி சுவாமிமலை சென்று விட்டு கும்பகோணம் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நடராஜனின் உறவினரிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து 3 பேரும் தனிதனியாக கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

அதன்படி வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் அம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் சரவணக்குமார்(23), திருவாரூர் மாவட்டம், எரவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கர்ணாகரன் மகன் தினேஷ்(21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர்-1 நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி தீர்ப்பளித்தார். அதில் சரவணக்குமார், தினேஷ் ஆகிய 2 பேருக்கும் தலா 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபதார தொகையை கட்ட தவறினால் 2 வருடம் 3 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!