திருச்சி பெரியகடைவீதியில் உள்ள 20 வது வார்டு வளையல்காரத் தெரு, சக்திமிகு மாரியம்மன் மற்றும் கண் திறந்த மாரியம்மன் கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் இருசக்கர வாகனம் திருட முயற்சி செய்துள்ளது. வாகனத்தின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர வெளியே வந்து கொள்ளை கும்பலில் ஒருவனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றார்.
அப்போது அவர்கள் எங்களை பிடித்து போலீசில் தானே ஒப்படைப்பாய், நாளை நாங்கள் வெளியே வந்து விடுவோம், அதன் பிறகு நீ உயிருடன் இருக்க
மாட்டாய் என கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து உள்ளனர். திருட்டு கும்பல் 6 பேரும் போதையில் இருந்து உள்ளனர். அவர்கள் அந்த பகுதி மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் திருட்டு கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை பிடிக்க போனால் கொலை செய்வோம், போலீசுக்கு போனாலும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். போலீசார் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.