தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிலாங்கரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து தெருக்களுக்கும் தரமான தார் சாலை அமைக்க வேண்டும்.தினமும் குடிநீர் வழங்க வேண்டும். முறையான கழிவுநீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.
பாதாள சாக்கடைப்பணிகளை தரமான முறையில் அனைத்து தெருக்களுக்கும் அமைத்து இரு புறமும் வடிகால் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடைக்கு அனுமதி பெற முன் வைப்பு தொகையை ரத்து செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டு என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்கள் வல்லத்தில் சாலை மறியல் செய்தனர்.
தஞ்சை – திருச்சி சாலை பெரியார் சிலை அருகில் இந்த சாலை மறியல் நடந்தது. தகவலறிந்த வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகி, வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தால் மட்டுமே சாலைமறியலை விலக்கி கொள்வோம் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சாலை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை வாபஸ் பெற்றனர். இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகி கூறுகையில், பாதாள சாக்கடைப்பணிகள் நடந்து வருவதால்தான் சாலைப்பணிகள் முடிவடையாமல் உள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்க போர் வசதி போடப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குடிநீர் பிரச்னையும் சரி செய்யப்படும் என்றார்.