அரியலூர் மாவட்டம் சிலப்பனுர் கிராமத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அரியலூர், திருமானூர் பகுதிகளுக்கு தினமும் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் இவர்களது கிராமத்தில் இருந்து திருமானூர் மற்றும் அரியலூர் பகுதிகளுக்கு செல்லும் சாலை 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.
இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகமும் செய்யப்படுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சிலுப்பனுர் கிராமத்தின் வழியாக அரியலூர் சென்ற அரசு பேருந்தை மறித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏலாக்குறிச்சி, சுண்டக்குடி, அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.