புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சியில் 9வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை மிகச்சரியாக கீரமங்கலம் மற்றும் செரியலூர் இனாம் ஊராட்சிகளின் எல்லையில் செல்கிறது. இந்த சாலையில் 400மீ நீளம், 8.5மீ அகலம் இருக்க வேண்டிய சாலையை தனிநபர்கள் ஆக்கிரமித்தது போக 5 மீ அகலம் தான் தற்போது சாலை இருக்கிறது. மீதமிருக்கும் 3.5மீ சாலையை மீட்டுத்தரக் கோரியும், பல நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை அடுத்து, கீரமங்கலம் பேரூராட்சியின் 9வது வார்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, குறிப்பிட்ட சாலையைக் காணவில்லை எனவும், உடனடியாக அந்த சாலையைக் கண்டுபிடித்துத் தருமாறும் புகார் மனு ஒன்றை கீரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர். வடிவேலுவின் கிணற்றைக் காணவில்லை என்ற திரைப்பட நகைச்சுவை பாணியில் சாலையைக் காணவில்லை எனக்கூறி புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.