மயிலாடுதுறை திருவாரூர் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சிறுசிறு பாலங்கள் கட்டுமான பணி மற்றும் சாலைகள் தரம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே வழுவூர் மேல வீதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் ( 26). எலக்ட்ரீசியனான இவர் விவசாய பணிக்கு வந்த வேலையாட்களுக்கு உணவு வாங்குவதற்காக நேற்று இரவு பைக்கில் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் எலந்தங்குடி பகுதிக்குச் சென்றுள்ளார்.
சாலைப் பணிக்காக எலந்தங்குடி பகுதியில் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி கம்பி கட்டும்பணி உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில் மணிகண்டன் சென்ற பைக் சாலை நடுவில் பள்ளத்தில் விழுந்து அதில் உள்ள கம்பி சொருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக் கண்ட ஊர் மக்கள் ஒன்று திரண்டு எலந்தங்குடி
பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அஜாக்கிரதையாகவும் முன் எச்சரிக்கை செய்யாமலும் பணி செய்ததால் சாலை பள்ளத்தில் உள்ள கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிர் இழப்பு நடந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும் வரை சாலை மறியல் தொடரும் என்று உடலை அப்புறப்படுத்த விடாமல் தடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் எழுதிக் கொடுக்கும் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல் ஆய்வாளர் நாகவள்ளி அளித்த உத்தரவாத்தின் பேரில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். உடனடியாக மணிகண்டன் உடல் அப்புறப்படுத்தப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் மயிலாடுதுறை திருவாரூர் சாலை பகுதியில் 3 மணி நேரம்வாகனபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை செல்லக்கூடிய பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது.