கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே அமைந்துள்ள வடுகப்பட்டி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்வதற்கு சரியாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. அதாவது சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு ஒரு வழி பாதையாக உள்ளது.
இதனால் கிராமத்தில் ஏதேனும் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால் சடலத்தை ஒரு வழி பாதையில் சுமந்து செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
மேலும் மயானத்திற்கு செல்லும் பாதையில் வாய்க்காலில் நீர் தேங்கி இருப்பதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் பாதையில் சடலத்தை தூக்கிக்கொண்டு 4 பேர் நடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளதாகவும். பாதையில் செல்லும்போது தவறி விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பல்வேறு முறை மனுக்கள் அழித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.