மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சி கீழ்கரை மற்றும் மாதா கோவில் பகுதியில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டு சாலை வசதி செய்து தர வேண்டும், மாதா கோவில் அருகே உள்ள குளத்தில் பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டுமென கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கீழ்க்கரை, மாதா கோவில் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் செம்பனார்கோவில்- காரைக்கால், மங்கை நல்லூர்- பொறையார் பிரதான சாலையின் முக்கு அரும்பாக்கம் என்ற இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அங்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ் செம்பனார்கோவில் பி டி ஓ மஞ்சுளா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழை காலம் முடிந்த பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து சீரடைந்தது.