அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டம், சூரியமணல் மதுரா துளாரங்குறிச்சி கிராமம் மேம்பாலம் அருகில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி சென்ற பொழுது உடையார்பாளையம் வட்டம், சூரியமணல் மதுரா துளாரங்குறிச்சி கிராமம் மேம்பாலம் அருகில் சென்ற பொழுது போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தார்.
இதில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் இரண்டிற்கும் மேற்பட்ட ஆட்களுடன் ஓட்டப்பட்டதாலும், ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் இன்றி ஓட்டப்பட்டதாலும், ஓட்டுனர் உரிமம் பெற வயதில்லாத சிறார்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததாலும் பறிமுதல்
செய்யவும், நான்கு சக்கர வாகனங்கள் விதிமுறைகளை மீறி ஒரு வழிப் பாதையில் வந்ததாலும் பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையிடம் ஒப்படைத்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வருவாய்த்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கும் வகையிலும்,விலை மதிப்பில்லாத மனித உயிர்களைப் பாதுகாக்கும் வகையிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணிந்து உரிய ஆவணங்களுடன் வாகனங்களை இயக்குவதுடன் சாலைபாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார்.