அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட காலனி தெருவில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாத காலமாக போதுமான அளவிற்கு குடிநீர் வழங்கவில்லை எனவும், வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் கழிவு நீராக வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன், அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். மேலும் விரைவில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தங்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலைமறியல் போராட்டத்தினால் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் வேனிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.