ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் குண்டலி அருகே நேற்று இரவு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வடமேற்கு மாவட்டத்தில் சிறப்பு நிலையில் பணியமர்த்தப்பட்ட இன்ஸ்பெக்டர் தினேஷ் பெனிவால், ஆதர்ஷ் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரன்வீர் என்பது தெரியவந்தது.
டெல்லியில் பணிபுரியும் இவர்கள், தனிப்பட்ட காரில் சோனிபட்டில் உள்ள வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஹரியாணா போலீசார், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் போலீஸ் அதிகாரிகள் பயணித்த கார் முற்றிலும் சேதமடைந்து உருக்குலைந்துள்ளது. இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றன.

பிரேத பரிசோதனை முடிந்ததும், சடலங்கள் இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மூடுபனி காரணமாக சாலை முற்றிலும் தெரியாத நிலை நிலவியதாகவும், அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இன்ஸ்பெக்டர்கள் பயணித்த கார் மோதியதாகவும் தெரியவந்துள்ளது. ஹரியாணா மாநிலத்தில் சாலை விபத்தில் இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்த சம்பவம் அம்மாநில போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.