கடந்த 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் 18 மணி நேர விசாரணைக்கு பின்னர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடனே அமலாக்கத்துறை அவரை கைது செய்ததாக அறிவித்தது. அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை, மருத்துவமனைக்கே நேரில் சென்று விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அவரை ஜூன் 28ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதேநேரம், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை ஏற்று, மருத்துவமனையில் வைத்தே அவரிடம் 8 நாட்கள் விசாரணை நடத்தவும் நீதிபதி அனுமதி அளித்தார். இதனிடையே காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து, செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 16ம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கவர்னர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், “பண பரிமாற்றம், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழங்குகளில் சிக்கி மோசமான குற்ற நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்கொள்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்துகொண்டு விசாரணைக்கும், நீதிபரிபாலனைக்கும் இடையூறு செய்கிறார். அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்படும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் அவர் இருக்கிறார். மேலும், மாநில போலீசின் விசாரணையில், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடரப்பட்ட சில வழக்குகளும் உள்ளன. எனவே செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை போன்றவற்றை கடுமையாக பாதித்து, அரசியல் சாசன எந்திரத்தை செயல்படவிடாமல் செய்யும் என்ற சந்தேகம் வருவதற்கு சரியான காரணம் உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு கவர்னரின் இந்த நடவடிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தோடு இதனை சட்டரீதியாக எதர்கொள்வோம் என அறிவித்தார். கவர்னர் ரவியின் இந்த அறவிப்பிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாக அதுவரை பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் நேற்று நள்ளிரவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருந்த நிலையில் அதற்கு பயந்து கவர்னர் அந்தர் பல்டி அடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..