திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நான்குரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று தொழில் தொடர்பாக சீனிவாசன் வெளியூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி கலையரசி, வீட்டில் பிள்ளைகளுடன் தனியே இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அவர்களது வீட்டிற்குள் புகுந்த 5 முகமூடி கொள்ளையர்கள், குழந்தைகளின் கழுத்தில் கத்திவை வைத்து, வீட்டில் உள்ள பணம், நகைகளை தரும்படி கலையரசியை மிரட்டினர். பின்னர், அறையில் இருந்த 5 பீரோக்களை உடைத்து உள்ளே இருந்த 43 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிக்கொண்டு, அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதனை தொடர்ந்து, கலையரசி அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேடச்சந்தூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி, காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிப்பட்டன. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் வேடச்சந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.