திருவெறும்பூர் அருகே புதிய மேட்டு கட்டளை வாய்க்காலில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கரை வழிந்து உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாயனூர் காவிரி ஆற்று கதவணையிலிருந்து திருவெறும்பூர் பகுதிக்கு உய்ய கொண்டான் மற்றும் மேட்டு கட்டளை வாய்க்கால் என இரண்டு பிரிவுகளாக தண்ணீர் வந்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடிக்கும் எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிய மேட்டு கட்டளை வாய்க்காலில் நேற்று பெய்த கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் தண்ணீர் கரை புரண்டு வழிய தொடங்கி உள்ளது. அப்படி வழியும் தண்ணீர் அளவு அதிகரித்தால் கரையில் உடைப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
அப்படி கரை உடைந்துவரும் தண்ணீர் உப்பு வாரி வழியாக நவல்பட்டு அண்ணா நகர் பகுதி ஊருக்குள்ள நுழையும் இதனால் அண்ணாநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படும்
இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நவல்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு உடனடியாக இச்சம்பவம் குறித்து பொது பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் எந்த நேரம் கரை உடைப்பு ஏற்படும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் வாய்க்கால் கரை உடைந்து விடுமோ என்ற அச்சததில் அந்த பகுதி மக்கள் உள்ளனர்.