ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை கண்டித்தும்,எம்பி பதவியிலிருந்து நீக்கியதை கண்டித்தும்,காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அதன்படி தமிழகம் முழுவதும் காங்கிரஸ்
கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அறிவித்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக திட்டமிட்ட நிலையில் முன்கூட்டியே மாவட்ட தலைவர் அமிர்தராஜை போலீசார் கைது செய்தனர்.இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அதன்படி வெளிப்பாளையம் மறைமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயிலை மறிக்கும் நோக்கில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கட்சியின் மாவட்ட பொது செயலாளர் தெய்வானை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெளிப்பாளையம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையான போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். நாகையில் இரயில் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இரயிலை மறிக்கும் நோக்கில் தண்டாவளத்தில் அமர்ந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.