தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுபற்றி தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறும்போது சந்திரசேகர ராவ் கட்சிக்கும், பாஜகவுக்கும் உறவு ஏற்பட்டு விட்டது. அதனால் ஜாமீன் கிடைத்து விட்டது என கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஜாமீன் வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கவாய், முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது அறிக்கைக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு நிபந்தனையற்ற மரியாதையும் உயர்ந்த மரியாதையும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்” என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.