Skip to content
Home » பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா (66). ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிப்புரா ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஹொளேநரசிப்புரா போலீசில் கடந்த மாதம் 27ம் தேதி, ரேவண்ணா மீதும் அவரது மகனும் எம்.பி.,யுமான பிரஜ்வல் மீதும் அவரது வீட்டில் வேலை செய்த, வேலைகாரப் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக இருவர் மீதும், நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவானது. இந்த நிலையில் பிரஞ்வல்  இளம்பெண்களுடன் இருப்பதான வீடியோக்கள் வைரலானது. மேலும் இருவர் மீதும் எளிதில் ஜாமின் கிடைக்கும் பிரிவுகளின் கீழ், இருவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாக, விமர்சனங்கள் எழுந்தன. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, ரேவண்ணாவுக்கு, எஸ்.ஐ.டி., சம்மன் அனுப்பியது. பிரஞ்வல் வெளிநாடு சென்று விட்டதால்  அவரை இந்தியா அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எஸ்ஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்மனுக்கு ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை. முன்ஜாமின் கேட்டு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி பிரீத் விசாரித்தார். எஸ்.ஐ.டி., சார்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ், “ரேவண்ணா மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யவில்லை,” என்றார். இதை ஏற்று முன்ஜாமின் மனுவை ரேவண்ணா தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது. விசாரணைக்கு ஆஜராகவும் தயாராகி வந்தார். இதற்கிடையில், மைசூரு கே.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில், ராஜு,(20), என்ற வாலிபர் அளித்த புகாரில் கூறியதாவது.. ரேவண்ணாவின் வீட்டில் 2018 முதல் 2021 வரை வேலை செய்த என் தாயை, கடந்த மாதம் 29ம் தேதி ரேவண்ணாவின் உறவினர் சதீஷ் பாபு, ரேவண்ணா அழைத்து வரச் சொன்னதாகக்கூறி, அழைத்துச் சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் பிரஜ்வல் ஆபாச வீடியோக்களில் ஒன்றில், என் தாயின் கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை கொடுக்கும், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. என் தாயை மீட்டு தர வேண்டும் என்றார். அதன்பேரில் ரேவண்ணா, சதீஷ் பாபு ஆகிய இருவர் மீதும் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவானது. நேற்று முன்தினம் சதீஷ் பாபுவை எஸ்.ஐ.டி.,யினர் விசாரணைக்குப் பின் கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, ரேவண்ணா தரப்பில் நேற்று முன்தினம், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் பட், விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்து இருந்தார்.  நேற்று காலை இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலையில் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையை மதியம் ஒத்திவைக்கப்பட்டது. மதியம் நடந்த விசாரணையின்போது, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். இதற்கிடையில் ரேவண்ணாவால் கடத்தப்பட்ட பெண், மைசூரின் ஹுன்சூர் காளேனஹள்ளி கிராமத்தில், ஒரு பண்ணை வீட்டில் எஸ்.ஐ.டி.,அதிகாரிகளால் அதிரடியாக மீட்கப்பட்டார். அந்த பண்ணை வீடு ரேவண்ணாவின் ஆதரவாளர் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமானது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு முன்ஜாமின் மனு மீது, நீதிபதி சந்தோஷ் பட் தீர்ப்பு கூறினார். ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து இடைக்கால தீர்ப்பு வழங்கினார். விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  இதையடுத்து ரேவண்ணாவை கைது செய்ய, எஸ்.ஐ.டி., நடவடிக்கை எடுத்தது. பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவகவுடாவின் வீட்டில், ரேவண்ணா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மாலை 6:30 மணிக்கு அங்கு எஸ்.ஐ.டி., சென்றது. வீடு உள்புறமாக பூட்டி இருந்தது. கதவை தட்டியும், யாரும் திறக்கவில்லை. ஆனாலும் வீட்டு வாசலில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் காத்திருந்தனர். மாலை 6:50 மணிக்கு வீட்டின் கதவை திறந்து, ரேவண்ணாவே வெளியே வந்தார். அவரை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைது செய்து, ஜீப்பில் ஏற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *