நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பத்து மாதங்கள் கடந்து விட்டது. அண்மையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி னார். 2026 சட்டமன்ற தேர்தலில்போட்டியிட தயாராகி வரும் அவர் தற்போது தனது கடைசிப் படத்தை நடித்துக் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
பிப்ரவரி மாதத்தில் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். தனது ரசிகர்களை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என மக்களோடு தொடர்பில் இருந்தவர்களையும், இருப்பவர்களையும் கட்சிக்குள் கொண்டுவர விஜய்க்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளதாம்.
இதேபோல், ஓய்வுபெற்ற ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள், டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள் என அதிகார வர்க்கத்தில் இருந்தவர்களை தவெக-வுக்குள் கொண்டுவர இன்னொரு தரப்பினர் முயற்சி செய்வதாகச் சொல்கிறார்கள். இவர்களால் தான் திமுக, அதிமுகவுக்கு ஈடுகொடுக்க முடியும் என்றும் விஜய் தரப்பு நினைக்கிறதாம்.
இதற்கிடையே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடும் பணியையும் விஜய்க்கான தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். இன்னும் 6 மாதத்தில் வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மக்கள் மத்தியில் பிரபலமான மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என இலக்கு வைத்துக் கொண்டு இந்த வேட்பாளர் தேடுதல் குழு களமிறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்!