புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:
என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு மக்களுக்கு உங்கள் சந்திர பிரியங்காவின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்…
என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினைஎழுதுகிறேன்.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன்…
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை பல சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான முன்னுதுராணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவுபகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.
மக்கள் செல்வாக்குமூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.
தலித் பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல்போனது… தொடர்ந்து ஜாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்.
சொந்தப் பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா..
கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.
என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிறினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியினை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்.
எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான என் நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.
இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும்அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன். நன்றி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.