தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி, குருணை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு மினி லாரியில் 3 பேர் மூட்டைகளை குடோனுக்கு இறக்கி கொண்டிருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக 12.5 டன் ரேஷன் அரிசி குருணை, 1 டன் ரேஷன் அரிசி ஆகியவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூப்பக்கோவில் அப்துல் கலாம் நகரை சேர்ந்த அருள் (வயது 19), அஜித்குமார் (24), கீழத்தெருவை சேர்ந்த ஆசைகுமார் (20) என்பதும், அந்த குடோனை லிங்கதுரை என்பவர் வாடகைக்கு எடுத்து ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து அவற்றை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அருள், அஜித்குமார், ஆசைகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து மினி லாரி மற்றும் குருணை ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.