அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் அண்மை கால அறிவிப்பின் படி வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்கையான முறையில் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷனில் வினியோகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தியா முழுவதும் ரேசன் கடைகளில் வழங்கிடும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியினை கலந்து விற்பனை செய்வதனை கட்டாயமாக்குவது என்பது இந்திய அரசின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக தனிமனித உணவு தேர்ந்தெடுப்பதற்கு எதிராக உள்ளது.
இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ரகங்களை உண்பதன் மூலமாக பல்வேறு உடல்ரீதியான தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என சுற்றுச்சூழல் இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு கூறிய வண்ணம் உள்ளனர். இதன் மூலம் சாமானிய மக்கள் பெரும் நோய்களுக்கு ஆளாகும் சூழலை தவிர்க்க இயற்கை விவசாயிகளிடம் உற்பத்தி செய்த பாரம்பரிய நெல்ரகங்களை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்து ஆரோக்கியம் காக்கப்படுவதோடு இயற்கை விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். மேலும் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பணியில், பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை ஈடுபடுத்துவதனை தடை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.