Skip to content
Home » உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. 410 மணி நேரத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தீபாவளி தினமான கடந்த 12ம் தேதி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் விரைந்து துவங்கப்பட்டது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 17 நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.  தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், வெளிநாட்டு எக்ஸ்பர்ட்டுகள், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் இணைந்து இந்த மீட்பு பணியை மேற்கொண்டு வந்தனர். இந்த பணிகள் நேற்று மாலை முடிவடைந்த நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் முதற்கட்டமாக 2 தொழிலாளர்கள் வெற்றிகரமாக சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு மீட்பு பணி என்பது வேகமாக நடந்தது. இதனால் அடுத்தடுத்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்டு வரப்பட்டு இரவு 8.40 மணியளவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து 410 மணிநேரம் நடந்து வந்த மீட்பு பணி என்பது வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த குடும்பத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதற்கு ஜனாதிபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொழிலாளர்களுடன் போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *