Skip to content
Home » இந்த குடியரசு தினவிழாவில் முதன்முதலாக இடம்பெற்ற சிறப்புகள்

இந்த குடியரசு தினவிழாவில் முதன்முதலாக இடம்பெற்ற சிறப்புகள்

இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதனை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள், மாவட்டங்களில் கவர்னர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி வைத்து வீரவணக்கங்களை செலுத்தினர். இந்த 74-வது குடியரசு தினத்தில் முதன்முதலாக ராணுவ அணிவகுப்பில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

. குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும் ராஜபாதை கடந்த ஆண்டு கடமை பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, முதன்முதலாக இந்த கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை இன்று ஏற்றியுள்ளார். முதன்முறையாக வெளிநாட்டு படைப்பிரிவான எகிப்து ராணுவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின் 2020-ம் ஆண்டில் இருந்து சிறப்பு விருந்தினர் யாரும் குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாத நிலையில், நடப்பு ஆண்டில் முதன்முதலாக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல்-சிசி தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த ஆண்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) முழுவதும் மகளிர் அடங்கிய பிரிவினர் முதன்முதலாக அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இவற்றில் கடற்படை உள்ளிட்ட பல பிரிவினரும் அடங்குவார்கள்.

முதன்முறையாக இந்த முறை கடற்படையை பெண் அதிகாரியே தலைமையேற்று நடத்தி சென்றார். அதன் ஒரு பகுதியாக அவருடன் 3 பெண் அதிகாரிகள் சென்றனர். இந்த முறை அணிவகுப்பில், ஆயுத படைகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு முதன்முதலாக அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. இதற்கு முன்பு, 21 துப்பாக்கிகள் அடங்கிய வீரவணக்கத்திற்கு இங்கிலாந்து நாட்டின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால், நடப்பு ஆண்டில் முதன்முதலாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரான 105 மி.மீ. அளவு கொண்ட இந்திய கள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் பயன்படுத்திய வெடிபொருளும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். முதன்முதலாக, நடப்பு ஆண்டில் ரஷிய பீரங்கிகளை பயன்படுத்தவில்லை. அவற்றுக்கு பதிலாக இந்திய தயாரிப்பான அர்ஜுன் பீரங்கிகள் மற்றும் ஆகாஷ் ஏவுகணை உள்பட அனைத்தும் இந்திய தயாரிப்புகளே காட்சிப்படுத்தப்பட்டன. இந்த முறை முதன்முதலாக இந்திய கடற்படையின் ஐ.எல்.-38 ரக உளவு விமானம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. முதன்முதலாக எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) மகளிர் பிரிவு பங்கேற்றுள்ளது. நிறைவு விழாவில் முதன்முதலாக 3-டி முறையிலான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று, இந்திய விமான படையானது முதன்முதலாக, இந்த ஆண்டில் நிறைவு விழாவின்போது, 4 ராகங்களை இசைக்க செய்ய இருக்கிறது. இதற்கு முன்பு வேறு எந்த படைகளும் இதுபோன்று ராகங்களை கொண்ட பாடல்களை இசைத்ததில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!