தென்னக ரயில்வேயின் திருச்சி பொன்மலை மத்திய பணிமனையின் சார்பாக 74-வது குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினர், பாரத சாரண-சாரணியர் மற்றும் பணிமனைப் பயிற்சி மையத்தினுடைய பயிற்சியாளர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தலைமை பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம் விழாவில் பேசும்போது, நடப்பு நிதியாண்டு 2022-23-ல் 31.12.2022 வரையில் பல்வேறு துறைகளில் நடந்து முடிந்த சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும் நடப்பாண்டில் மண்டல அளவில் அதிகமான கேடயங்களைப் பெறுவதற்கு அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்த குழுவின் இடைவிடாத முயற்சியினை வெகுவாகப் பாராட்டினார்.
இந்தப் பணிமனையின் உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர் நலன் முதலானவற்றில் தொழிலாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆற்றிய சிறப்பான முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிய தலைமைப் பணிமனை மேலாளர், 41 தொழிலாளர்களுக்கு சிறப்பு விருதுகளையும், 35 கண்காணிப்பாளர்கள் மேலும் 4 அலுவலர்களுக்கு தலைமைத்துவ விருதுகளையும் மற்றும் தொழிலாளர்கள் அடங்கிய 20 4 குழுக்களுக்கு விருதுகளையும் வழங்கினார். முதன்முறையாக, CBSE வாரியத் தேர்வில் 2022-ல் பொன்மலையில் உள்ள ரயில்வே உயர்நிலைப்பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை கவுரவித்தார்.
பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பணிமனைப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள், பொன்மலை மாவட்ட பாரத சாரண-சாரணியர்களால் தேசபக்தி சார்ந்த ஆக்கப்பூர்வமான கலாசார நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
குடியரசு தின கொண்டாட்டங்களின்ஒரு பகுதியாக விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் மேலாளர்ஷியாமாதார் ராம் முன்னிலையில் மூங்கில் (முள்ளில்லா) மரக் கன்றுகள் பணிமனையில் நட்டனர். இதுவரை, 12250வகை மூங்கில் மரக் கன்றுகள் இந்த பணிமனையில் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். காடு வளர்ப்பு மற்றும் அறிவியல் கழிவு மேலாண்மை முயற்சிகள்மூலம் சுற்றுச்சூழலுக்கு 4,000 மெட்ரிக் டன் பசுமை இல்லா வாயு வெளியேற்றத்தைபொன்மலை பணிமனை தடுத்துள்ளது. மேலும் காடு வளர்ப்பு ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கும் வகையில்ஆக்ஸிஜனை வெளியிட்டுள்ளது.