சென்னை மயிலாப்பூர் அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (46). இவர் கூடுவாஞ்சேரி சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். வைத்தியலிங்கம் கடந்த 11ம் தேதி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது… விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வராகி (எ) கிருஷ்ணகுமார் (50). பத்திரிகையாளர். வராகி, கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் வைத்தியலிங்தை தொடர்பு கொண்டு, “நீங்கள், கூடுவாஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளீர்கள். இதுதொடர்பாக நான் செய்தி வெளியிட உள்ளேன்” என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாகவும் யூடியூப்பிலும் செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சார்பதிவாளர் வைத்தியலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில், மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான போலீசார் வராகியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் கால்லிஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாக கொண்டு, போலி பத்திரிகையாளர் வராகி (எ) கிருஷ்ணமூர்த்தி மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் (66டி) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை 18வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வராகி, நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 27ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.