தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் ஆய்வு செய்தேன். கலெக்டர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தேன்.
மழை பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் 18 குழுக்களாக பிரிந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தற்போதும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்ய துணை முதல்வர் சென்றுள்ளார். விழுப்புரத்தில் 147 நிவாரண முகாம்களில் 7 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் மட்டும் 1 லட்சத்து 29 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டு உள்ளது. உயிரிழப்பு, கால்நடைகள் இழப்புக்கு , சொத்துக்கள் இழப்புக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
வெள்ள சேதம் குறித்து மத்திய அரசுக்குஅறிக்கை அனுப்பி வைத்து நிவாரண உதவி கேட்கப்படும். மத்திய அரசு குழுவையும் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்வோம். மழை நின்றபிறகு மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.