சென்னை தியாகராயநகரில் ரேகா கலெக்சன் என்ற பெயரில் பிரபல துணிக்கடை உள்ளது. அந்த கடைக்கு சொந்தமான குடோன் தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை திலக் தெருவில் உள்ளது. அந்த குடோனில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டுப்புடவைகள் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் வழக்கம்போல கடை ஊழியர்கள் வந்து குடோனை திறந்தனர். அப்போது அதிர்ச்சி காத்திருந்தது. குடோனில் இருந்த 26 பட்டுப்புடவை பண்டல்களை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அவற்றில் இருந்த பட்டுப்புடவைகளின் மதிப்பு ரூ.28 லட்சம் ஆகும். இது தொடர்பாக துணிக்கடை சார்பில் பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட குடோனில் காவலாளியாக வேலை பார்த்த ராம் என்பவர், பட்டுப்புடவைகளை கொள்ளையடித்து ஆட்டோ ஒன்றில் இன்னொருவர் உதவியுடன் ஏற்றிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. காவலாளி ராம் ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்தவர். அவரையும், அவருடன் இருந்த இன்னொரு நபரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.