பருவ மழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டம் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின் பகிர்மான வட்ட அளவில் அதிக அளவு மின்தடைகள், மின்மாற்றிகள் பழுது மற்றும் புகார்கள் கொண்ட பகுதிகளில் தனிக் கவனம் செலுத்துமாறு மேற்பார்வைப் பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கும் துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகள் ஆகியவற்றை உரிய முறையில் பராமரித்து தனி கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
30 நிமிடங்களுக்கு மேல் மின்தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் அதற்கான காரணத்தையும் அந்தந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களிடமிருந்தும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெறப்படும் புகார்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கு வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.