கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம்(ஐ.என்.சி.ஓ.ஐ.எஸ்) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன.
கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல்கொந்தளிப்பும் ஏற்படுவதையே கள்ளக்கடல்’ எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது. இந்திய முன்னெச்சரிக்கை மையங்கள் முதன் முறையாக இந்த சொற்றொடரை பயன்படுத்தி தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்து உள்ளன.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதைத் தடுக்கும் வகையில், படகுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு நிறுத்துமாறும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர், நாகைக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.