நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 4 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று கூறியதாவது:
4 மாவட்டங்களிலும் தொடர்ந்து ரெட் அலர்ட் நீடிக்கிறது. 24 மணி நேரத்தில் 21 செ.மீ. மேல் மழை பதிவானால் அது அதிகனமழையாக பார்க்கப்படுகிறது. இதற்கு தான் ரெட் அலர்ட் என்கிறோம். இது மேகவெடிப்பு அல்ல. ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 10 செ. மீ. மழை பெய்தால் அது தான் மேகவெடிப்பு. குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வழக்கமாக வளிமண்டலத்தில் ஏற்படும் சுழற்சியால் இவ்வளவு அதிகமான மழை பெய்யாது. ஆனால் தற்போது அதிகனமழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.