கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று பழனிநாடார் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தபால் ஓட்டுக்களை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்கு எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரியாக உதவி கலெக்டர் லாவண்யா இருந்து இந்த வாக்கு எண்ணிக்கையை நடத்தி வருகிறார். மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு,இருந்தது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 20 நிமிடத்தில் அதிமுகவினருக்கும், ஓட்டு எண்ணும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு சீட்டை மட்டும் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளரிடம் அதிகாரிகள் காட்டினர். 13 சி பாரத்தையும் தங்களிடம் காட்ட வேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்தது. அதை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொர்ந்து 11.10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், மீண்டும் 12.10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 15 நிமிடம் வாக்குஎண்ணிக்கை நடந்தது. அப்போது, வாக்குபதிவு படிவத்தில் உள்ள கையெழுத்து குறித்து அதிமுக, காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 2வது முறையாகவும் வாக்குஎண்ணிக்கை நிறுத்தப்பட்டது-