மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 42 ஏக்கரில் 1965ம் ஆண்டிலிருந்து இயங்கிவைந்த பஞ்சாலை நட்டத்தில் இயங்கியதால் 2003ம் ஆண்டு மூடப்பட்டது,அந்த ஆலை இடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் 2014ம் ஆண்டு மணல்மேடு அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டது மீதமுள்ள 37 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் காடுபோல் காட்சியளித்து வருகிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேதாராண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதே போன்று ஏற்கனவே பஞ்சாலை இயங்கிய மணல்மேட்டில் ஆயத்த ஆடை பூங்கா துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று வேதாரண்யம் ஆயத்த ஆடை திட்ட இயக்குனராக திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத்தியாளர் சங்கத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிவரும் முரளி தலைமையில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் முன்னிலையில் ஒரு குழுவினர் மணல்மேடு பஞ்சாலையை முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்
ஆய்விற்குப் பின் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கூறுகையில், இந்த ஆலை மூடப்பட்டு 20 ஆண்டுகளாகிறது, மீண்டும் பஞ்சாலை வருவதற்கான வாய்ப்பில்லை என்பதால் வேதாரண்யத்தில் துவங்கப்பட்டுள்ள ஆயத்த ஆடை பூங்காவைப் போல் மணல்மேட்டிலும் துவங்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்விற்கு வேதாரண்யம் ஆயத்த ஆடை பூங்கா திட்ட அலுவலர் முரளி மற்றும் சிலர் வருகைதந்து ஆய்வு மெற்கொண்டதில் தேவையான இடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத்தியாளர் சங்க துணைத்தலைவர் மற்றும் வேதாரண்யம் ஆயத்த ஆடை பூங்கா திட்ட அலுவலர் முரளி கூறுகையில், ஆயத்த ஆடை தயாரிப்பதற்குத் தேவையான இடம் உள்ளது, 4 ஆயிரம் இயந்திரங்கள் போடப்பட்டு 4 ஆயிரம் நபர்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பு அளிக்க இயலும், இந்த தொழிலுக்குத் தேவையான நபர்களை இம்மாவட்டத்திலிருந்தே வேலைக்கு எடுத்து தேவையான பயிற்சியை அளித்து வேலை வாய்ப்பு வழங்க இயலும், மேலும் எங்களது ஆய்வு அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் அளிப்போம் என்றார்.