Skip to content
Home » தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

  • by Senthil

நேற்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், திருமுடிவாக்கம் தொழில்துறை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு, குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் 4 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் 28 துறைகளை சேர்ந்த மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டம் மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 மாவட்டங்களும் பருவமழையை எதிகொள்ள தயாராக இருக்கிறதா என்றும், அரசின் பல்வேறு திட்டங்களின் நிலை குறித்தும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைதொடர்ந்து, கள ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தினமும் காலை பத்திரிகை படிக்க வேண்டும், தொடர்ந்து ஊடகங்களை பார்த்து வரவேண்டும். இவ்வாறு பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது, உங்கள் மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் காணும் செய்திகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், அவ்வாறு தீர்வு காணப்பட்ட செய்திகளை ஊடகத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதனை உங்களின் காலை பணியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கான திட்டங்கள் எந்தவித குறைபாடின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும். தென்சென்னை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது. 10 வீடுகளுக்கும் குறைவாக உள்ள சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். சிறு குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.5 ஆக குறைக்கப்படும். ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!