Skip to content

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அரியலூர் மாவட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் (Video) மற்றும் சமூக ஊடக அட்டைகள் (Social Media Cards) ஒளிபரப்பு செய்யும் மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், “மீண்டும் மஞ்சப்பை” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பைகளை (மீண்டும் மஞ்சப்பை) வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றும் வகையில், நெகிழி கழிவுகள் சேகரித்து அப்புறப்படுத்தும் நிகழ்வு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வுகள், விழிப்புணர்வு வாகன பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகள், பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையேயான பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் / அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பசுமை சாம்பியன் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் தமிழ்நாட்டை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக உருவாக்குவதற்கு, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களின் விவரங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு சமூக ஊடக அட்டைகள் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பா.அகல்யா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!