திருச்சி மேலப்புதூர் பகுதியிலிருந்து கெம்ஸ்டவுன், முதலியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளம் உள்ளது இதனை பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ – மாணவிகள் கடந்து வந்தனர். இதில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டதால் இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதிகளில் பொதுமக்கள் செல்லும் வகையில் ரயில்வே பாலத்திற்கு கீழாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் அனுமதியுடன் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கட்டி முடித்தது. இதனை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்களாலும், மழை பெய்தாலும் அந்த பாலம் தண்ணீர் நிரம்பி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தும் அதிகாரிகளை சந்தித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அந்த ரயில்வே பாலத்தை கடந்து மக்கள் சென்று கொண்டு இருப்பதை கண்ட ரயில்வே காவல்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இன்று திடீரென வேறஹவுஸ் – மேலப்புத்தூர் போக்குவரத்து சாலையில் 50 க்கு மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கண்ட்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் நிக்சன், காந்தி மார்க்கெட் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ
இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து தரப்படும் என தெரிவித்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள்
10நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கலைந்து சென்றனர்.