கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை எழுப்பி விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அத்தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக வாரணாசிக்கு செல்ல விவசாயிகள் காசி தமிழ்ச் சங்கம் ரயிலில் முன்பதிவு செய்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 39 விவசாயிகள் காசி தமிழ்ச் சங்க வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (கன்னியாகுமரி – வாரணாசி) திருச்சியில் இருந்து இன்று காலை ஏறினர்.
ஆனால் திடீரென இருக்கைகள் இல்லை. காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகவும் ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் 39 பேரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது அபாயச் சங்கிலியை இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுமார் 2 மணிநேரம் ரயில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எடுத்து விவசாயிகளிடம் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்லும் வழியில் விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற நிலையங்களில் கிடைக்கும் காலி இருக்கைகளை ஒதுக்கீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிறுவனத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக ரயிலில் 111 பேர் முன்பதிவு செய்தோம். இந்தப் பயணச் சீட்டுகள் நேற்று மாலை உறுதி செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இந்நிலையில், இன்று காலை பயண சீட்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வாரணாசி வரை விவசாயிகள் நின்று கொண்டே பயணிப்பது கடினம். கூடுதல் பெட்டியை இணைக்க இணைக்க கேட்டு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால்தான் ரயிலில் அபாய சங்கலியை இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.