அரியலூர் வடக்கு வருவாய் கிராமமான எருத்துகாரன் பட்டி கிராமத்தில் இருளர் இனமக்களும் பொதுமக்களும் இணைந்து குடியிருப்புகளை அமைத்து பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது போக்குவரத்திற்கு அரியலூர் ரயில் நிலையம் செல்லும் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் ரயில்வே நிலைய அபிவிருத்தி பணிகள் திட்டத்தின் கீழ் அரியலூர் ரயில்வே நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் அரியலூர் ரயில் நிலையத்தை ஒட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இருளர் இன மக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய சாலையை கேட் போட்டு அடைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக ரயில் நிலையத்தை சுற்றி 1.5 கீ.மீ நீள சுற்று சுவர் கட்டப்பட்ட நிலையில் சாலையை மூடி கேட் போட சுற்று சுவரில் கட்டை கட்டும்பணி தற்போது தொடங்கியுள்ளது. இதனால் தங்களது பொது போக்குவரத்து மற்றும் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்துதல் உள்ளிட்ட
போக்குவரத்து வசதியை பயன்படுத்த முடியாது என்ற காரணத்தினால் அப்பகுதி பொதுமக்கள்கட்டை சுவர் கட்டும் பணியை தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். கட்டைச்சுவர் கட்டும் பணியை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறியதால் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். நிரந்தரமாக அச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், ரயில்வே நிலைய சுற்றுச்சுவர் அருகில் உள்ள பொதுபாதையில் அரியலூர் நகராட்சி சார்பில் தார்சாலை அமைத்து தரவும் பொதுமக்கள் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.