கடந்த 25 ம் தேதி நள்ளிரவு நேரத்தில் கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. அந்த லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்தது.
லாரி விழுந்த சத்தம் கேட்டதும் அப்பகுதியில் இருந்த வயதான தம்பதி சண்முகையா – வடக்கத்தியம்மாள் மற்றும் காவலாளி சுப்பிரமணியன் ஆகியோர் அங்கு சென்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தூரத்தில் ரயில் வரும் ஓசை கேட்டது. தண்டவாளத்தில் லாரி கிடக்கும் நிலையில் ரயில் வந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதை எண்ணி அஞ்சிய அந்த வயதான தம்பதி தங்கள் வீட்டிற்கு ஓடிச்சென்று டார்ச் லைட்டை எடுத்து ரயிலை நோக்கி அடித்து சிக்னல் கொடுத்தனர்.