தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் கஞ்சாவை பிடிப்பதற்கு போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வந்த பாமினி விரைவு ரயிலில் திருச்சி ரயில்வே கஞ்சா தடுப்பு தனிப்படை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சீர்காழி ரயில் நிலையம் வருவதற்கு முன்பு ரயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு இல்லாத பெட்டியில் கழிவறை அருகே இரண்டு டிராவல் பேக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டெடுத்த ரயில்வே போலீசார் அதனை சோதனை செய்தபோது 11 பொட்டலங்களில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த இரும்பு பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை போலீசார் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே போலீசார் முன்னிலையில் நாகை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.