உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி, ரயில் பெட்டியை பூட்டிக்கொண்டு சமைத்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுற்றுலா நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்த கோர தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கும் அதேவேளையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் நலம்பெற விரும்புகிறோம். ரயில் பயணங்களில் மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.