Skip to content
Home » விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் வந்த தஞ்சை ராணுவ வீரர், காயமடைந்தவர்களை மீட்டு உதவி

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் வந்த தஞ்சை ராணுவ வீரர், காயமடைந்தவர்களை மீட்டு உதவி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள  இளங்கார்குடியை சேர்ந்தவர்  வெங்கடேசன். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர், தற்சமயம் மேற்கு வங்காளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையில்  பணியாற்றி வருகிறார்.  விடுமுறைக்கு  சொந்த ஊருக்கு வருவதற்காக, கடந்த ஜூன் 2ம் தேதி கோரமண்டல் விரைவு ரயிலில் ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார்.

அன்று இரவு 7 மணியளவில் இந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில்  ஒடிசாவில் தடம் புரண்டு, சரக்கு ரயிலில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. மேலும், சில பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்ததில், அந்த தடத்தில் வந்த ஹவுரா அதிவிரைவு ரயிலும் மோதி கோர விபத்தாக உருவெடுத்தது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.  இந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த ரயிலில் பயணித்த இந்திய ராணுவத்தின் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வெங்கடேஷ், உடனடியாக, தனது உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, நடந்த ரயில் விபத்து குறித்து தகவல் அளித்ததுடன் அவர் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றுள்ளதால், விபத்தை பார்த்ததும் அவர் ரயிலில் இருந்து இறங்கி 

பலரையும் மீட்டார். இதனால் பலர்  உயிர் பிழைக்க காரணமாக  அவர் இருந்துள்ளார். இந்த கோரமண்டல் ரயில் விபத்தையடுத்து, அவர் சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் சோழன் விரைவு ரயிலில் கும்பகோணம் ரயில் நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மேற்கு வங்காளத்தில் இந்திய ராணுவத்தின் தேசிய பேரிடர் மீட்பு பிரிவில் இரண்டாவது பட்டாலியனில்  நான் பணியாற்றி வருகிறேன். விடுமுறைக்காக, வீட்டிற்கு செல்வதற்காக கடந்த ஜூன் 2ம் தேதி கோரமண்டல் அதிவிரைவு ரயில் மாலை 3 மணியளவில் கொல்கத்தா சாலிமார் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய நிலையில், 4 மணி நேரத்தில், இரவு 7 மணி அளவில்  ஒடிசா மாநிலம் பாலசோர் வந்தபோது பயங்கர சத்தத்துடன் விபத்துக்குள்ளானது.

அப்போது, இந்திய ராணுவத்தின் பேரிடர் மீட்புப்பிரிவில் இருப்பதால் தன்னால் முடிந்த வரையில் முதியவர்கள், படுகாயமடைந்து நடக்க முடியாதவர்கள் என பலரையும் இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்டேன். முன்னதாக, நான் பயணித்த ரயில் பெட்டிக்குள் இருந்த எல்லோரும் விபத்தினால் பயந்து,  அலறினர். பின்னர் நான் பணியிடத்தில் பெற்ற பயிற்சி அனுபவத்தின் அடிப்படையில், அவர்களை அச்சப்பட வேண்டியதில்லை. ஏதேனும் ரயில் பெட்டிகள் தடம் புரண்டிருக்கலாம் என்று அமைதிப்படுத்தினேன். பின்னர் ரயில் நின்றவுடன் அனைவரையும் பத்திரமாக இறக்கிவிட்டேன் என்றார்.

பின்னர், அதே ரயிலில் இளங்கார்குடி செல்ல பாபநாசம் நோக்கி பயணித்தார். தொடர்ந்து, நாயக்கர் பேட்டை கிராமத்தை வந்தடைந்த வெங்கடேசனை, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து ஆனந்த கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது, இவ்வளவு பெரிய விபத்து நடைபெற்றது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதாகவும், குடும்பத்தாரையும், உறவினர்களையும், ஊர் மக்களையும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெங்கடேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!