மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே மாப்படுகையில் அதிக போக்குவரத்து உள்ள காலை நேரத்தில் ரயிலை தடம் மாற்ற இயக்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலை ரயில் தடம் மாற்றுவதற்காக வந்தபோது மாப்படுகை கிராமவாசிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ரயிலை மீண்டும் ரயில் நிலையம் செல்லாதவாறு தண்டவாளத்தில் அமர்ந்து தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். மாலை 3 40 மணிக்கு விழுப்புரம் செல்ல உள்ள ரயிலை காலை 9 மணிக்கு பீக் அவர்சில் இயக்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ரயில்வே நிலைய மேலாளர் சங்கர்குரு, ரயில்வே இன்ஸ்பெக்டர் சுதிர்குமார். மயிலாடுதுறை நகர காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலை 9.10 மணிக்கு தொடங்கிய போராட்டம் ஒன்னரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதன் காரணமாக ரயிலை மீண்டும் நிலையத்துக்கு எடுத்துச் செல்ல கிராமவாசிகள் அனுமதித்து போராட்டத்தை விலக்கி கொண்டனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு தினசரி 21 பயணிகள் ரயில் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் வந்து செல்லும் நிலையில் shunting ரயிலை வேறு மார்க்கத்தில் இயக்க வேண்டும், மாப்படுகையில் உடனடியாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராமவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.