ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதிய 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. கடைசி நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அதைத்தொடர்ந்து இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தனது ஓய்வை அறிவித்தார். அவருக்கு வயது 38 .சமீப காலமாக அஸ்வின் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த 2 வது டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இது தான் அஸ்வினுக்கு கடைசி டெஸ்ட். அவர் இதுவரை 106 டெஸ்ட்களில் ஆடி உள்ளார். டெஸ்ட்களில் மட்டும் 3503 ரன்கள் எடுத்து உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5 சதம் அடித்து உள்ளார். 116 ஒரு நாள் போட்டியிலும் 65 சர்வதேச டி20 போட்டிகளிலும் ஆடி உள்ளார். டெஸ்ட்டில் 537 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டியில் 156 விக்கெட்டுகளும், டி20யல் 72 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
2011, 2015 ஆகிய உலக கோப்பை போட்டிகளில் அஸ்வின் ஆடி உள்ளார்.2010ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். அஸ்வினின் 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நிறைவு பெறுகிறது. தற்போது அவர் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளார்.
பேட்டி அளிப்பதற்கு முன் பிரிஸ்பேன் மைதானத்தில் அஸ்வின் இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.