தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என ரூ.170 பணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் இலவசமாக வழங்குவதற்கான அரிசியை கொடுக்க ஒன்றிய அரசின் உணவுக் கழகம் மறுத்ததால், அந்த அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜூலை ஒன்றாம் தேதி முதல் இலவச அரிசிக்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “5 கிலோ அரிசி கூடுதலாக கொடுப்பதாக வாக்குறுதி அளித்த கர்நாடக காங்கிரஸ் அரசு அதற்கு பதிலாக ரூபாய் 170 ஐ பணமாக கெடுப்பதாக கூறியுள்ளது மக்களை ஏமாற்றும் மோசடி செயல். வாக்குறுதி வழங்குவதற்கு முன் அரிசியை கொள்முதல் செய்ய முடியுமா என்று கூட திட்டமிடாமல், சிந்திக்காமல் அறிவித்து விட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அரிசியை கூட வழங்க முடியவில்லையெனில் , அந்த அரசு இருந்து என்ன பயன்? ஆட்சி, அதிகாரத்திற்காக பொய் சொல்லி, ஏமாற்றி, மோசடி செய்த காங்கிரஸ் அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என கருத்து தெரிவித்துள்ளார்.