கரூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் திருமாநிலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தின்படி வந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றபோது, அப்பகுதியில் ஒரு வீட்டின் முன்பு அந்த மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகள் கரூர் போலீசார் உதவியுடன் அந்த வீட்டின் நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 650 கிலோ ரேஷன் அரிசியை அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்ததாக கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 650 கிலோ ரேஷன் அரிசியும், அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.