பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் ரத்தன் டாடாவின் எழுதியுள்ள உயில் விவரங்கள் வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்தாக சுமார் ரூ. 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் இருக்கின்றன. ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார்.
இதன்படி..
* ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும்.
* அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.
* ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவருக்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ள டாடா, தன் வளர்ப்பு நாயான டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.
* தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்.