உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன.
கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன கருவிகளால் சுமார் 46 மீட்டர் தூரம் வரைதான் துளையிட முடிந்தது. அதன்பின், 12 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில் சிக்கல் ஏற்பட்டது.
அப்போதுதான் எலி வளை சுரங்க தொழிலாளரக்ள் (Rat-Hole Miners) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3 மீட்டர் தூரம் வரை தோண்டுவார்கள். இதனால் மூன்று நாட்களுக்கு மேல் ஆகலாம் என நினைத்திருந்தனர்.எலி வளை சுரங்க தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இடத்தை பார்த்ததும் எளிதாக தோண்டிவிடலாம் எனத் தெரிவித்து நேற்று முன்தினம் தங்களது பணியை தொடங்கினர்.
ஒருவர் உள்ளே சென்று இடிபாடுகளை மண்வெட்டி மற்றும் கைகளால் எடுத்து வெளியே அனுப்ப வேண்டும். வெளியில் இருப்பவர்கள் அதை இழுப்பு கையிறு மூலம் வெளியே கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர்கள் இடிபாடுகளை வெளியே கொண்டு வந்தனர். சுமார் 18 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை தோண்டி இடிபாடுகளை அகற்றினார்கள். பணிகளை வேகமாக முடித்து சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்தனர்.
எலி வளை தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்ததும், ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக்குழு அதிகாரி ஒருவர் “எலி வளை தொழிலாளர்களின் செயல் எதிர்பார்ப்பை மீறிய செயலாகும். 18 மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மீட்டர் வரை தோண்டுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் 10 மீட்டர் வரை தோண்டினர்.” என்றார்.
மீட்பு குழுவினர் எதிர்பார்த்தை விட வேகமாகவே தொழிலாளர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். 17 நாட்களாக சுரங்கம் என்னும் தாய் வயிற்றில் இருந்த 41 தொழிலாளர்களும் மறு பிறவியாய் நேற்று மீண்டு வந்தனர். இதை அவர்களது குடும்பத்தினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சியோடு வரவேற்றது. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் என அனைத்து தரப்பினரும் மீட்பு குழுவுக்கும், மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனா்.
வடகிழக்கு மாநிலங்களில் நிலக்கரி சுரங்கம் அதிகமாக இருக்கிறது. நிலக்கரி சுரங்கத்தில் மேல்மட்டத்தில் குறுகிய விட்டம் கொண்ட அளவில் குழி தோண்டுவார்கள். ஒருவர் உள்ளே சென்று மண்ணை வெளியே எடுத்து அனுப்ப, வெளியே இருப்பர்கள் அதை அப்புறப்படுத்துவார்கள். நிலக்கரி இருக்கும் இடத்தை அடைந்ததும், உள்ளே பக்கவாட்டில் குடைந்து குழியை விரிவுப்படுத்துவார்கள். அதன்பின் நிலக்கரியை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டும் நிலக்கரியை இந்த குழி வழியாக வெளியே அனுப்புவார்கள். அந்த குழி வழியாக நிலக்கரியை வெளியே எடுக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு குறுகிய குழி 800 மி.மீ. விட்டத்தை விட சிறியதாக இருப்பதால் எலி வளை போன்று காணப்படும். இதனால் எலி வளை சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டனர். இது மிகவும் ஆபத்தானது. ஒருவேளை நிலச்சரிவு ஏற்பட்டாலோ, மழை பெய்தாலோ சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை மீட்பது மிகவும் கடினம். அவர்களது உடலைக்கூட மீட்க முடியாது. இவ்வாறு சில துயர சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், இதில் சிறுவர்களும் பயன்படுத்தப்படுவார்கள். இதனால், எலி வளை சுரங்கத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்ட தொழிலாளர்களை கொண்டு ஒரு மிகப்பெரிய மீட்பு பணி வெற்றி அடைந்துள்ளது. தடை செய்யப்பட்டது என்றாலும், அவர்களது அனுபவம், திறன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளியே வந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். உயிருடன் வெளியே வருவோமா, குடும்பத்தினரை காண்போமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. 41 பேர் உள்ளே இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் தைரியம் சொல்லிக்கொண்டோம். மறுநாளே எங்களுக்கு திரவ உணவு வரத்தொடங்கியதால், நம்மை மீட்க வேலை நடக்கிறது என்பதை அறிந்து தைரியம் அடைந்தோம். அனைவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என தொழிலாளர்கள் ஆனந்தத்தோடு தெரிவித்தனர்.