ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில் பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டும் கொடூர தாக்குதல் நடந்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 40 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். குண்டு வீசப்பட்டதால் அந்த அரங்கமே தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த அரங்கமே இடிந்து விழுந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 30க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 70 ஆனது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் குறித்து அறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் புதின் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷியாவில் துப்பாக்கிச்சூடு , வெடிகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ரஷ்யாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்தியாவும், இந்திய மக்களும் ரஷ்யாவுக்கு துணை நிற்பார்கள் என்று பிரதமர் கூறி உள்ளார்.