சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் கூறியதாவது:
92வது விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை வான்வழி சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை டில்லியில் நடைபெற்று வந்த விமான படை வான்வழி சாகச நிகழ்ச்சி தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னர் சென்னையில் கடந்த 2003ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இதுபோன்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்னையில் பிரம்மாண்டமான விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. அக்டோபர் 6ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் அரக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூலூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிநவீன ரபேல் விமானம் உட்பட 72 போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன.
அதேபோல் அக்டோபர் 8ம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி காலை 7:30 மணி முதல் 11 மணி வரை நடத்தப்பட உள்ளது. விமான சாகச நிகழ்ச்சிகளை கோவளம் கடற்கரை முதல் ஐஎன்எஸ் அடையாறு வரை கடற்கரையில் எந்தப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் எளிதாக கண்டுகளிக்க முடியும்.
விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு சென்னை மெரினாவில் சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனை லிம்கா உலக சாதனையாக நிகழ்த்த உள்ளோம். சென்னையில் நடத்த ஏற்பாடாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.